நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நீ வெட்கப்படாவிட்டால், நினைத்தை செய்துகொள்' என்பது, முந்திய நபித்துவ வாசகங்களில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட ஒன்றாகும்.' [ஸஹீஹானது-சரியானது] - [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்] - [صحيح البخاري - 6120]
விளக்கம்
முன்சென்ற நபிமார்களின் உபதேசமாக வந்து, மக்களுக்கிடையில் பரிமாறப்பட்ட, வாழையடி வாழையாக இந்த சமுதாயத்தின் ஆரம்பம் வரை வந்தடைந்த ஓர் அம்சமாவது, 'நீ எதைச் செய்யவிரும்புகின்றாயோ, அதைப் பார். அது வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருந்தால், விட்டுவிடு. அவ்வாறில்லாவிட்டால், அதைச் செய். ஏனெனில், அசிங்கமானதைச் செய்யத் தடையாக இருப்பது, வெட்கமே! யாரிடம் வெட்கம் இல்லையோ, அவர் எல்லா மானக்கேடான பாவங்களிலும் மூழ்கிடுவார்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
வெட்கமே எல்லா நற்குணங்களுக்கும் அடிப்படையாகும்.
வெட்கம் என்பது, நபிமார்களால் உபதேசிக்கபட்ட, அவர்களது பண்புகளில் ஒன்றாகும்.
வெட்கம் தான் ஒரு முஃமினை அழகான, நற்காரியங்களில் ஈடுபடவும், அசிங்கப்படுத்தும், மோசமான செயற்களை விடவும் தூண்டுகின்றது.
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இங்கு வந்துள்ள ஏவல், அனுமதியைக் காட்டவே வந்துள்ளது. அதாவது, நீ ஏதாவதொன்றைச் செய்ய விரும்பி, நீ அதைச் செய்யும் போது, அல்லாஹ்வோ, மனிதர்களோ பார்ப்பதை நினைத்து வெட்கப்படா விட்டால், அதைச் செய்துவிடு. அவ்வாறில்லா விட்டால், செய்யாதே. இஸ்லாத்தின் அடிப்படையே இதுதான். அதாவது, ஏவப்பட்ட, கடமைகள் மற்றும் ஸுன்னாக்களை விடுவதற்கு வெட்கப்பட வேண்டும். தடுக்கப்பட்ட, ஹராமான மற்றும் மக்ரூஹான அம்சங்களை செய்வதற்கு வெட்கப்படவேண்டும். அனுமதிக்கப்பட்டவற்றைப் பொறுத்தவரை, அவற்றைச் செய்வதற்கும் வெட்கப்படலாம், விடுவதற்கும் வெட்கப்படலாம். எனவே, இந்த ஹதீஸ் ஐந்துவிதமான சட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது ஒரு எச்சரிக்கையான ஏவல் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, உன்னிடமிருந்து வெட்கம் பிடுங்கப்பட்டுவிட்டால், நீ நாடியதைச் செய்துகொள்! நிச்சயமாக அதற்காக அல்லாஹ் உனக்குக் கூலி வழங்கவே செய்வான். இது ஒரு செய்தியின் அர்த்தத்தைத் தரும் ஏவல் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, யார் வெட்கப்படவில்லையோ, அவன் நினைத்ததை செய்துகொள்வான்.