عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه: «يا عبادي، إني حرَّمتُ الظلمَ على نفسي وجعلتُه بينكم محرَّمًا فلا تَظَالموا، يا عبادي، كلكم ضالٌّ إلا من هديتُه فاستهدوني أَهْدَكِم، يا عبادي، كلكم جائِعٌ إلا من أطعمته فاستطعموني أطعمكم، يا عبادي، كلكم عارٍ إلا من كسوتُه فاسْتَكْسُوني أَكْسُكُم، يا عبادي، إنكم تُخطئون بالليل والنهار وأنا أغفر الذنوبَ جميعًا فاستغفروني أغفرْ لكم، ياعبادي، إنكم لن تَبلغوا ضَرِّي فتَضُرُّونِي ولن تَبْلُغوا نَفْعِي فتَنْفَعُوني، يا عبادي، لو أن أولَكم وآخِرَكم وإنسَكم وجِنَّكم كانوا على أتْقَى قلبِ رجلٍ واحد منكم ما زاد ذلك في ملكي شيئًا، يا عبادي، لو أن أوَّلَكم وآخِرَكم وإنسَكم وجِنَّكم كانوا على أفْجَرِ قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئًا، يا عبادي، لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صَعِيدٍ واحد فسألوني فأعطيت كلَّ واحدٍ مسألتَه ما نقص ذلك مما عندي إلا كما يَنْقُصُ المِخْيَطُ إذا أُدخل البحر، يا عبادي، إنما هي أعمالكم أُحْصِيها لكم ثم أُوَفِّيكُم إياها فمن وجد خيرًا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

அபூ தர் அல்கிபாரீ (ரலி) கூறுகின்றார்கள் : கண்ணியமிக்க இறைவனிடமிருந்து அறியப் பெற்றதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் அநீதி இழைத்துக் கொள்ளாதீர். எனது அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். எனது அடியார்களே, நான் உணவளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்போரே. ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். எனது அடியார்களே! நான் ஆடை அளித்தவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானோ பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன். எனது அடியார்களே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் அடைய முடியாது. இன்னும் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்கள், ஜின்கள் ஆகிய நீங்கள் அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. எனது அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்கள் ஜின்கள் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது. என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டாலும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஓர் ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் குறையும் அளவிற்குக் கூட குறைத்து விடுவதில்லை. எனது அடியார்களே! இவைதான் உங்களுடைய செயல்கள். அவற்றைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நலவைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ்வைப் புகழட்டும். நலவு அல்லாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம்.
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஹதீஸுல் குத்ஸியான இந்நபிமொழி மார்க்கத்தின் அடிப்படைகள், மற்றும் அதன் உட்பிரிவுகளில் பல பயன்பாடுகளையும், ஒழுக்கங்களையும் கற்றுத் தருகின்றது. அல்லாஹ் தனது தயாள குணத்தினாலும், அடியார்களுக்குச் செய்யும் உபகாரத்தினாலும் தன்மீதே அநீதியை ஹராமாக்கிக் கொண்டுள்ளான். தனது படைப்பினங்களுக்கு மத்தியிலும் அதனை ஹராமாக்கியுள்ளான். எனவே யாரும் யாருக்கும் அநீதியிழைக்கக் கூடாது. அல்லாஹ்வின் வழிகாட்டல், அனுகூலமின்றி அனைத்துப் படைப்பினங்களும் வழிகெட்டவர்களே, அல்லாஹ்விடம் நேர்வழியைக் கேட்பவருக்கு அவன் அனுகூலம் புரிந்து, நேர்வழிகாட்டுவான். அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்விடம் தேவையுள்ள வறியவர்கள். அல்லாஹ்விடம் கேட்போருக்கு அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பான். அடியார்கள் அனைவரும் இரவு, பகலாக பாவம் செய்யக் கூடியவர்கள், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கும் போது அவன் அவற்றை மறைத்து மன்னித்து விடுகின்றான். அடியார்கள் அனைவரும் தமது சொல், செயல்களால் அல்லாஹ்வுக்கு நலவோ,கெடுதியோ செய்ய எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களால் ஒரு போதும் முடியாது. அவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு மிக அஞ்சிய ஒருவருடைய உள நிலையிலோ, மிகமோசமான பாவியுடைய உள நிலையில் இருந்தாலோ அவர்களுடைய இறையச்சம் அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் ஓரளவேனும் அதிகரிக்கப் போவதுமில்லை, அவர்களுடைய பாவங்கள் அவனது ஆட்சியதிகாரத்தில் ஓரளவேனும் குறைக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் எல்லாக் காலங்களிலும், இடங்களிலும் அவன்பால் தேவையுடைய வறியவர்களே. அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி, ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டு, அவர்கள் கேட்ட அனைத்தையும் அவன் கொடுத்தாலும் அவனது பொக்கிஷத்தில் சிறிதளவேனும் குறைய மாட்டாது. ஏனெனில் அது என்றும் நிரம்பி வழியக்கூடியது, இரவு, பகலாக செலவு செய்தாலும் அது குறைவடைவதில்லை. அல்லாஹ் அடியார்களின் அனைத்து செயல்களையும் பாதுகாத்து, அவர்களது நன்மை, தீமைகளைக் கணக்கிட்டு வைக்கின்றான், பின் மறுமையில் அதனடிப்படையில் கூலி வழங்குவான். தனது செயல்களுக்குரிய கூலியாக சுவனத்தைப் பெற்றுக் கொண்டவர் அல்லாஹ் அவனுக்கு வழிப்படும் பாக்கியத்தைத் தனக்களித்ததற்காக அவனைப் புகழட்டும், தண்டனைகளைக் கூலியாப் பெற்றவர் தன்னை நஷ்டத்தின் பால் தூண்டிய தனது ஆன்மாவையே நொந்து கொள்ளட்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறியதாக வெளிப்படையாகக் கூறி அறிவிக்கும் செய்திகளும் நபிமொழிகளில் உண்டு, அவற்றுக்கு "ஹதீஸ் குத்ஸீ (புனிதமிக்க நபிமொழி), "ஹதீஸ் இலாஹீ" (தெய்வீக நபிமொழி) எனக் கூறப்படுகின்றது.
  2. அல்லாஹ்வுக்கு வார்த்தை எனும் பண்புள்ளதாக உறுதிப் படுத்தல், இது அல்குர்ஆனில் அதிகமுள்ளது. அல்லாஹ்வின் பேச்சுக்கு ஓசை உண்டு என்ற அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாட்டிற்கு இதில் ஆதாரமுண்டு. ஏனெனில் ஓசையுள்ள செவிமடுக்க முடியுமானதற்கு மாத்திரமே வார்த்தை எனப்படுகின்றது.
  3. அல்லாஹ்வால் அநீதியிழைக்க முடியும், எனினும் தனது பூரணமான நீதியினால் அதனைத் தனக்குத் தானே ஹராமாக்கிக் கொண்டுள்ளான்.
  4. அநீதியிழைப்பது ஹராமாகும்.
  5. அல்லாஹ்வின் சட்டங்கள் நீதத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்.
  6. அல்லாஹ்வின் பண்புகளில் அநீதி போன்ற மறுக்கப்படும் எதிர்மறையான பண்புகளும் உள்ளன. இருப்பினும் அல்லாஹ்வுடைய பண்புகளில் எதிர்மறையான பண்புகள் என்பது அவற்றின் எதிர்பதமான உடன்பாட்டுப் பண்பை உறுதிப்படுத்தாமல் எந்தப் பண்பும் இல்லை. அல்லாஹ் அநீதியிழைக்க மாட்டான் என்ற எதிர்மறைப் பண்பின் அர்த்தம் அதற்கு எதிர்பண்பான நீதம், நேர்மை என்ற உடன்பாட்டுப் பண்பு அவனிடம் குறைவற்று முழுமையாக உள்ளது என்பதையே உணர்த்துகின்றது.
  7. அல்லாஹ்விற்கு தான் நாடியவற்றைத் தனக்கே தடுத்துக் கொள்ள முடியும், ஏனெனில் சட்டமியற்றுவது அவன்தான், அதேபோன்று தான் நாடியவற்றைத் தனக்குக் கடமையாக்கிக் கொள்ளவும் முடியும்.
  8. உள்ளமைக்கு ஆன்மா எனப் பயன்படுத்தலாம். இந்நபிமொழியில் எனக்கு என்பதை அறிவிக்க "عَلَى نَفْسِيْ" எனப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இங்கு "نَفْسِ" எனும் ஆன்மா என்றால் உள்ளமையாகும். அதாவது அல்லாஹ்வுடைய உள்ளமை என்பதே இதன் அர்த்தமாகும்.
  9. மனிதன் தனக்கு ஏற்படும் அனைத்து சோதனைகளின் போதும் அல்லாஹ்வை முன்னோக்குவது கடமையாகும். ஏனெனில் அனைத்துப் படைப்பினங்களும் அவனின் பக்கமே தேவையுடையவையாகும்.
  10. அல்லாஹ் முழுமையான நீதவான், அரசன், தன்னிறைவுள்ளவன், தனது அடியார்களுக்கு பேருபகாரம் புரிபவன். அடியார்கள் தனது தேவைகளை நிறைவேற்ற அவனிடமே முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
  11. "என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன்" எனும் வார்த்தையின் அடிப்படையில் நேர்வழி அவனிடம் மாத்திரமே வேண்டப்பட வேண்டும்.
  12. மனூ, ஜின்கள் அடிப்படையில் வழிகேட்டிலேயே உள்ளனர். இங்கு வழிகேடு என்பது சத்தியத்தை அறியாதிருப்பதும், அதன்படி நடக்காமல் இருப்பதுமாகும்.
  13. அடியார்கள் பெற்றுக் கொள்ளும் அறிவு, நேர்வழி அனைத்தும் அல்லாஹ் கற்பித்து, வழிகாட்டியதன் மூலமே பெறுகின்றனர்.
  14. அனைத்து நலவுகளும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு அவர்களுடைய தகுதியையும் மீறி உபகாரமாக வழங்கியதாகும், அனைத்து கெடுதிகளும் மனிதர்கள் தமது மனோஇச்சையைப் பின்பற்றியதால் வந்த விளைவாகும்.
  15. அடியான் தனது செயல்களைப் படைத்துக் கொள்வதில்லை, மாறாக அவன், மற்றும் அவனது செயல் அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவையே.
  16. பாவங்கள், தவறுகள் எவ்வளவு அதிகரித்தாலும் அல்லாஹ் அவற்றை மன்னிக்கின்றான். இருப்பினும் மனிதன் அதற்காகப் பாவமன்னிப்புக் கோர வேண்டும். இதனால் தான் அல்லாஹ் "என்னிடம் பாவமன்னிப்புக் கோருங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன்" எனக் கூறுகின்றான்.
  17. நன்மை செய்தவர் அல்லாஹ்வுடைய அனுகூலத்தின் மூலமே செய்துள்ளார், அதற்கான கூலியும் அவனுடைய சிறப்பாகும், எனவே அவனுக்கே புகழனைத்தும்.