عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2564]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் கோபம் கொள்ள வேண்டாம் (பிறரை அதிகவிலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை உயர்த்த வேண்டாம். ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டாம், ஒருவரை ஒருவர் புறக்கணிக்க வேண்டாம். உங்களில் சிலர் சிலரின் வியாபரத்திற்கு எதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். ஆகவே அவர் அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். அவரை கைவிடமாட்டார். அவரை இழிவுபடுத்த மாட்டார். இறையச்சம் இங்குள்ளது என மூன்று முறை தனது நெஞ்சைச் சுட்டிக்காட்டினார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை அவமதித்து இழிவாகக் கருதுவது தீமைக்கு போதுமான விடயமாகும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம் (உயிர்) செல்வம் மானம் ஆகியவை ஹராமாகும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2564]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதோடு, அவர்களுக்கு செய்ய வேண்டிய சில கடமைகள் மற்றும் பேண வேண்டிய சில ஒழுக்கங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்கள், அவற்றில் சில பின்வருமாறு: முதல் அறிவுரை: உங்களில் சிலர் மற்றும் சிலர் பெற்றிருக்கும் அருள்கள் நீங்கிவிட வேண்டும் என்று விரும்பி ஒருவருக்கொருவர் பொறாமைப்படாதீர்கள். இரண்டாவது: பொருளை வாங்கும் எவ்வித நோக்கமுமின்றி பொருளின் விலையை உயர்த்துவதற்காக ஏலம் விடாதீர்கள். இதனால் வியாபாரிக்கு இலாபத்தைப் பெற்றுக் கொடுக்கிறார் அல்லது வாங்குபவருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்றாவது: ஒருவரையொருவர் வெறுக்காதீர்கள். என்பது நேசம் கொள்வதை விடுத்து தீங்கு செய்வதை நோக்காகக் கொள்வதாகும். ஆனால் அல்லாஹ்வுக்காக மாத்திரம் வெறுப்புக் கொள்வதாய் இருந்தால் அது அவசியமான வலியுறுத்தப்பட்ட விடயமாகும். நான்காவது: முகத்தை திருப்பிக்கொள்வதன் மூலம் ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்காதீர்கள். அதாவது தனது சகோதரனை வெறுத்து புறக்கணித்து நடப்பதைக் இது குறிக்கும். ஐந்தாவது: வியாபாரி ஒருவர், இன்னொரு வியாபாரியிடம் ஒரு பொருளை வாங்கிய நபரிடம் இதே பொருள் என்னிடம் மிகக்குறைந்த விலையில் உள்ளது அல்லது இதே விலையில் மிகத்தரமான பொருள் உள்ளது என்று கூறி இன்னொரு சகோதரனின் வியாபாரத்திற்கு எதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மேலே குறிப்பிடப்பட்ட, தடுக்கப்பட்ட விடயங்களை விட்டுவிட்டு, எல்லா சூழ்நிலைகளிலும் தூய்மையான உள்ளத்துடன் அன்பு, இரக்கம், மென்மை பரஸ்பர கருணைகாட்டல்; மற்றும் நன்மையான விடயங்களில் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளுதல் போன்ற பண்புகளை கடைப்பிடித்து சகோதரர்களாய் இருங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்கள். இஸ்லாமிய சகோதரத்துவம் வேண்டி நிற்கும் முக்கிய விடயங்களில் சில பின்வருமாறு : தனது முஸ்லிம் சகோதரனுக்கு அநீதி இழைக்காமல் இருப்பது அல்லது அவருக்கு எதிராக அத்துமீறல் செய்யாமல் இருப்பது. அநீதி இழைக்கப்படும் சகோதர முஸ்லிமுக்கு அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதியை அகற்றுவதற்கான இயலுமை இருக்கும் நிலையில் அவரை கைவிட்டு விடாமல் இருப்பது. ஒரு முஸ்லிமை சிறுமைப்படுத்தாமலும் அவரை இழிவாகப் பார்க்காதிருத்தலும். இத்துர்குணம் உள்ளத்தில் காணப்படும் பெருமையின் விளைவால் ஏற்படுவதாகும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இறையச்சம் என்பது உள்ளத்தில்தான் உள்ளது என்றும், எவருடைய உள்ளத்தில் இறையச்சம் இருக்கிறதோ, அது நல்ல ஒழுக்கத்தையும், இறைபயத்தையும், அல்லாஹ் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டதோடு, இவ்வாரானவர் ஒரு முஸ்லிமைக் குறைத்து மதிப்பிடவோ அற்பமாக கருதவோ மாட்டார் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள். உண்மையில், தனது சகோதர முஸ்லிமை குறைத்து மதிப்பிடுவது அல்லது அற்பமாக கருதுவது ஒருவரிடம் காணப்படும் தீய பண்புகளினதும், தீய குணங்களினதும் மொத்த வடிவமாகும். ஏனெனில் இத்துர்குணம் ஒருவரது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆணவத்தினால் ஏற்படுவதாகும். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மேற்கூறியவற்றை வலியுறுத்துகிறார்கள், அதாவது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விடயங்களை விவரிக்கிறார்கள் முதலாவது ஒரு முஸ்லிமின் இரத்தம் (உயிர்) புனிதமானது என்றவகையில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அதில் அத்துமீறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் அவரைக் கொல்லவோ, காயப்படுத்தவோ, அடிக்கவோ, அல்லது அவருக்கு வேறு உடல் ரீதியான தீங்கும் செய்யவோ முடியாது. இரண்டாவது: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சொத்தை எவ்வித நியாயமான காரணமின்றி எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது, மூன்றாது : ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் மானத்தை காப்பது கடமையாகும் அதை மீறி நடப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, அதாவது ஒருவரின் குணம் அல்லது பரம்பரை பற்றி தவறாகப் பேசுவது கூடாது.