ஹதீஸ்: உங்களில் ஒருவர் உறங்கும் போது ஷைத்தான் அவரது தலையின் பிடரியில் மூன்று முடிச்சுக்களை இடுவான். ஒவ்வொரு முடிச்சின் போதும், 'உனக்கு நீண்ட இரவு உள்ளது. எனவே உறங்கு' எனக் கூறுவான்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் உறங்கும் போது ஷைத்தான் அவரது தலையின் பிடரியில் மூன்று முடிச்சுக்களை இடுவான். ஒவ்வொரு முடிச்சின் போதும், 'உனக்கு நீண்ட இரவு உள்ளது. எனவே உறங்கு' எனக் கூறுவான். அவர் விழித்து, அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு நீங்கிவிடும். அவர் வுழூ செய்தால் இன்னொரு முடிச்சும் நீங்கிவிடும். அவர் தொழுதுவிட்டால் அடுத்தமுடிச்சும் நீங்கிவிடும். எனவே அவர், சுத்தமான உள்ளத்துடன், உற்சாகமானவராக காலைப்பொழுதை அடைவார். அவ்வாறில்லா விட்டால் கெட்ட உள்ளத்துடன் சோம்பேறியாகக் காலைப் பொழுதை அடைவார். [ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1142]
விளக்கம்
இங்கு நபியவர்கள், ஷைத்தானுடைய நிலையையும், இரவுத்தொழுகைக்காக, அல்லது பஜ்ர் தொழுகைக்காக எழும்ப நினைக்கும் மனிதனோடு அவன் செய்யும் போராட்டத்தையும் விளக்குகின்றார்கள்.
ஒரு விசுவாசி தூங்கச் சென்றால், ஷைத்தான் அவனது பிடரியின் மீது மூன்று முடிச்சுக்களை இடுவான்.
அந்த முஃமின் கண்விழித்து, பின்னர் ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு செவிசாய்க்காமல் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும்.
அவன் வுழூ செய்தால் அடுத்ததும் அவிழ்ந்து விடும்.
அவன் எழுந்து தொழுதால், மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்துவிடும். வணக்கத்தில் ஈடுபடுவதற்கான பாக்கியத்தை அவனுக்கு அல்லாஹ் வழங்கிய மகிழ்ச்சியினாலும், ஷைத்தானுடைய முடிச்சுக்களும், தடுப்புக்களும் நீங்கிவிட்டதாலும் நல்லுள்ளத்துடனும், உற்சாகத்துடனும், அல்லாஹ் அவனுக்கு வாக்களித்துள்ள நன்மைகளையும், பாவமன்னிப்பையும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்த நிலையிலும் காலையை அடைவான். அவ்வாறில்லாவிட்டால், கெட்ட உள்ளத்துடனும், கவலையான மனத்துடனும், நற்கருமங்களில் ஈடுபட சோம்பல்பட்ட நிலையிலும் தான் காலையை அடைவான். ஏனெனில் அவன் ஷைத்தானின் விலங்குகளினால் விலங்கிடப்பட்டுள்ளான். ரஹ்மானின் நெருக்கத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுள்ளான்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்
ஷைத்தான் எப்போதும், எல்லா வழிகளையும் பயன்படுத்தி, அடியானுக்கும், இறைவழிபாட்டிற்கும் மத்தியில் பிரித்துவிடவே முயற்சிப்பான். ஒரு அடியான் ஷத்தானை விட்டும் பாதுகாக்கப்படுவது, அல்லாஹ்விடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்வது கொண்டும், பாதுகாப்பிற்கான காரணிகளை செயற்படுத்துவது கொண்டும் தான்.
அல்லாஹ்வை நினைவு கூறுவதும், அவனை வணங்குவதும் உள்ளத்திற்கு உற்சாகத்தையும், மன அமைதியையும் தருகின்றன. சோம்பல் மற்றும் வெட்டியாக இருத்தலை விரட்டிவிடுகின்றன. துன்பம் மற்றும் வெறுப்பை நீக்கிவிடுகின்றன. ஏனெனில், அவை ஷைத்தானை விரட்டி விடுகின்றன. இவையெல்லாம் ஷைத்தானின் ஊசலாட்டங்களே!
ஒரு விசுவாசி, வணக்கத்தில் ஈடுபடுவதற்கான பாக்கியத்தை அல்லாஹ் தனக்குத் தருவது கொண்டு மகிழ்ச்சியடைவான். சிறப்பு மற்றும் முழுமையை அடைவதற்கான படித்தரங்களை அடைவதில் தன்னிடமுள்ள கவனயீனத்தைப் பார்த்துக் கவலைப்படுவான்.
பராமுகம் மற்றும் வணக்கங்களை விட்டும் பின்வாங்குவது என்பன, ஷைத்தான் அலங்காரப்படுத்திக் காட்டும் அம்சங்களில் உள்ளவையாகும்.
அல்லாஹ்வை நினைவுகூறுதல், வுழூ, தொழுகை ஆகிய இந்த மூன்று விடயங்களும் ஷைத்தானை விரட்டக்கூடியவை.
ஷைத்தான், பிடரியில் குறிப்பாக முடிச்சுபோடக் காரணம், அதுவே சக்தியின் பிறப்பிடமாகவும், செயற்பாட்டு இடமாகவும் இருப்பதனாலாகும். எனவே, அதைக் கட்டிவிட்டால், அவனால் மனித ஆன்மாவை ஆக்கிரமித்துத் தூக்கத்தைப் போட்டு விடலாம்.
இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் கூறுகின்றார்கள் : 'உனக்கு நீண்ட இரவு உண்டு' என்ற வார்த்தையில் இரவு கூறப்பட்டிருப்பதன் மூலம், இந்த சட்டம் இரவில் உறங்குவதை மாத்திரமே குறிக்கும் என்பதுவே வெளிப்படையாகப் புரிகின்றது.
இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் கூறுகின்றார்கள் : திக்ர் என்று வரும் போது, குறிப்பிட்ட ஒரு திக்ரை மாத்திரம் கூறி, அதுவல்லாத வேறொன்றும் நிறைவேறமாட்டாது எனக் கூறமுடியாது. மாறாக, 'அல்லாஹ்வை திக்ர் செய்தல்' என்று கூறப்படமுடியுமான அனைத்துமே நிறைவேறக்கூடியது. எனவே, அதில் அல்குர்ஆனை ஓதுதல், ஹதீஸ்களை வாசித்தல், மார்க்கக் கல்வியைக் கற்றல் என அனைத்தும் நுழையும். பின்வரும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது மிகப் பொருத்தமான திக்ராக இருக்கும் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இரவில் உறக்கம் கலைந்ததோடு வாய்விட்டு, “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். அல்ஹம்து லில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லா இலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்”.
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் யாரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைத் தவிர வேறு இறைவனில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகுவதோ நன்மை செய்யும் ஆற்றல் பெறுவதோ கிடையாது) என்று கூறிவிட்டு,
‘அல்லாஹும்மஃக்பிர்லீ’ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ, அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை ஏற்கப்படும். அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.