عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ خَيْبَرَ:
«لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللهَ وَرَسُولَهُ، يَفْتَحُ اللهُ عَلَى يَدَيْهِ» قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: مَا أَحْبَبْتُ الْإِمَارَةَ إِلَّا يَوْمَئِذٍ، قَالَ فَتَسَاوَرْتُ لَهَا رَجَاءَ أَنْ أُدْعَى لَهَا، قَالَ فَدَعَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، فَأَعْطَاهُ إِيَّاهَا، وَقَالَ: «امْشِ، وَلَا تَلْتَفِتْ، حَتَّى يَفْتَحَ اللهُ عَلَيْكَ» قَالَ فَسَارَ عَلِيٌّ شَيْئًا ثُمَّ وَقَفَ وَلَمْ يَلْتَفِتْ، فَصَرَخَ: يَا رَسُولَ اللهِ، عَلَى مَاذَا أُقَاتِلُ النَّاسَ؟ قَالَ: «قَاتِلْهُمْ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ فَقَدْ مَنَعُوا مِنْكَ دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللهِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2405]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கைபர் யுத்த தினம் இவ்வாறு கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :
'நான் இந்தக் கொடியை, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்போகின்றேன், அவரின் கரத்தில் அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான்' என்று கூறினார்கள். உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அன்றைய தினத்தைத் தவிர, தலைமைத்துவத்திற்கு வேறு எப்போதும் நான் ஆசைப்பட்டது கிடையாது. அதற்காக நான் அழைக்கப்படவேண்டுமென, என்னை உயர்த்திக் காட்டிக்கொண்டேன். நபியவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து, அக்கொடியை அவர்களிடம் கொடுத்து விட்டு, 'அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தரும் வரையில் நீங்கள் திரும்பிப் பாராது செல்லுங்கள்.' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் சற்று தூரம் சென்றுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நின்றுகொண்டு, 'அல்லாஹ்வின் தூதரே, எதுவரை நான் மக்களுடன் போரிடவேண்டும்?' என்று சப்தமாகக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரிய கடவுள்கள் இல்லையென்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் சாட்சியமளிக்கும் வரை யுத்தம் செய்யுங்கள். அவர்கள் அவ்வாறு செய்துவிட்டால், தமது உயிர்களையும், சொத்துக்களையும், அவற்றில் உள்ள கடமைகளைத் தவிர, ஏனையவற்றில் உங்களை விட்டும் பாதுகாத்துக்கொள்வார்கள். அவர்களது விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2405]
நாளைய தினம், மதீனாவை அண்மித்த ஓர் ஊராகிய, கைபரில் உள்ள யூதர்களை முஸ்லிம்கள் வெற்றிகொள்வார்கள் என்ற செய்தியை நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். அதாவது, படையின் அடையாளமாகக் கொள்ளப்படும் அந்தக் கொடியை நபியவர்கள் யாருக்குக் கொடுப்பார்களோ, அவராலேயே வெற்றி கிடைக்கும். அந்த மனிதரின் ஒரு அடையாளம் என்னவென்றால், அவர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதோடு, அல்லாஹ்வும், அவனது தூதரும் அவரை நேசிப்பார்கள்.
உமர் (ரலி) அவர்கள், அந்நாளில் தான், தாம் தலைமைத்துவத்தை ஆசைப்பட்டதாகவும், அங்கு குறிப்பிடப்படுபவர் தாமாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டதாகவும் கூறுகின்றார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் அம்மனிதரை நேசிப்பதாக நபியவர்கள் கூறிய அந்த சிறப்பை அடைவதே அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. எனவே, நபியவர்கள் தம்மைக் கண்டு அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், அந்தக் கொடியைப் பெற்றுக்கொள்ளும் ஆசையிலும் உமர் (ரலி) அவர்கள் தமது உடம்பை சற்று உயர்த்தி வைத்துக் கொண்டார்கள்.
நபியவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து அவர்களிடம் கொடியைக் கொடுத்துவிட்டு, படையை அழைத்தக்கொண்டு செல்லுமாறும், தமது எதிரிகளை சந்தித்த பின்னர், ஓய்வெடுத்தலோ, இடைநிறுத்தலோ, அமைதி ஒப்பந்தமோ இன்றி, அல்லாஹ்வின் வெற்றியைப் பெற்று அந்தக் கோட்டைகளை வெற்றிகொள்ளும் வரை திரும்பிவரக் கூடாது என்றும் ஏவி அனுப்புகின்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள் சற்றுத் தூரம் சென்றுவிட்டு நிற்கின்றார்கள். ஆனாலும், நபியவர்களது கட்டளைக்கு மாறுசெய்யக்கூடாது என்பதனால், திரும்பிப் பார்க்கவில்லை. பின்பு அவர்கள் தமது சப்தத்தை உயர்த்தி, 'அல்லாஹ்வின் தூதரே, எதுவரை நான் மக்களுடன் போரிடவேண்டும்?' என்று கேட்டார்கள்.
அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரிய கடவுள்கள் இல்லையென்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் சாட்சியமளிக்கும் வரை யுத்தம் செய்யுங்கள். அவர்கள் அதற்கு பதிலளித்து, இஸ்லாத்தில் நுழைந்துவிட்டால், அவர்கள் தமது உயிர்களையும், சொத்துக்களையும் உம்மிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். உமக்கு அவை ஹராமாகிவிடும். ஆனால், அவற்றில் உள்ள கடமைகளைத் தவிர. அதாவது, இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், கொலையைக் கட்டாயமாக்கும் ஏதாவது, குற்றங்களை அவர்கள் செய்தாலே தவிர. அவர்களது விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.