عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1423]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அல்லாஹ், தனது நிழலைத் தவிர வேறு நிழல்கள் இல்லாத அந்த (மறுமை) நாளில் ஏழு தரப்பினருக்கு தனது நிழலைக் கொடுப்பான் : நீதம் செலுத்தும் ஆட்சியாளன், அல்லாஹ்வை வணங்குவதிலேயே வளர்ந்த வாலிபன், தனது உள்ளத்தால் பள்ளிவாசல் களுடன் பிணைக்கப்பட்ட மனிதன். அல்லாஹ்வுக்காக நேசம்கொண்டு, அவனுக்காகவே சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள். ஒரு மனிதனை அழகும் மதிப்பும் கொண்ட ஒரு பெண் பாவத்திற்காக அழைக்க, அவர் 'அல்லாஹ்வை நான் பயப்படுகின்றேன்' என்று கூறிக் கொண்டவர். தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத அளவு மறைத்து, தருமம் செய்த மனிதர், அல்லாஹ்வைத் தனிமையில் நினைத்து, கண்ணீர் வடித்தவர்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 1423]

விளக்கம்

இங்கு நபியவர்கள், அல்லாஹ், தனது நிழலைத் தவிர வேறு நிழல்கள் இல்லாத அந்த (மறுமை) நாளில் ஏழு தரப்பினருக்கு தனது அர்ஷின் நிழலைக் கொடுப்பான் என நற்செய்தி கூறுகின்றார்கள் : முதலாமவர் : தன்னில் தீயவராக அல்லாத, நீதம் மிக்கவராகவும், தனது பிரஜைகளுக்கு மத்தியில் அநீதமிழைக்காது நீதம் செலுத்துபவராகவும் இருப்பவராகும். இங்கு நாடப்படுபவர், நாட்டுத் தலைவராகும். எனினும், முஸ்லிம்களின் ஏதாவது விவகாரங்களைப் பொறுப்பேற்று, அதில் நீதமாக நடந்துகொள்ளும் அனைவரும் இதனுள் வருவர். இரண்டாமவர் : அல்லாஹ்வை வணங்குவதிலேயே வளர்ந்த வாலிபன். மேலும் மரணிக்கும் வரை, தனது வாலிபத்தையும், பலத்தையும் அதிலேயே செலவழித்தவர். மூன்றாவது : தான் பள்ளியில் இருந்து வெளியேறியதும், மீண்டும் அதில் நுழையும் வரை அதனுடனேயே உள்ளம் பிணைக்கப்பட்டு இருக்கும் மனிதன். அதற்கான காரணம், அதன் மீதுள்ள ஆழ்ந்த நேசமும், அதில் அதிகமாக இருப்பதும், உடலில் ஏதாவது ஏற்பட்டாலும், பள்ளிவாசலுக்கு வெளியே இருந்தாலும், உள்ளத்தால் எப்போதும் அதிலேயே இருப்பதும் ஆகும். நான்காமவர் : உண்மையில் அல்லாஹ்வுக்காக மாத்திரமே தமக்கிடையில் நேசம் பாராட்டிக் கொண்ட இருவர். அவ்விருவரும் மரணம் வரும் வரை, எந்தவொரு உலக நோக்கங்களுக்காகவும் தமது இந்த மார்க்க நேசத்தை துண்டித்துக் கொள்ளாதவர்கள். உண்மையில் அவர்கள் ஒன்றிணைந்து இருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும் சரியே! ஐந்தாமவர் : நல்லகுடும்பமும், மதிப்பும், சிறப்பும், பணமும், அழகும் கொண்ட ஒரு பெண் மானக்கேடான ஒரு செயலில் ஈடுபடுவதற்காக அவரை அழைக்கும் போது, மறுத்து, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று கூறி விலகியவர். ஆறாமவர் : குறைவாகவோ, அதிகமாகவோ தர்மம் செய்யும் ஒரு மனிதர். மேலும், அதில் முகஸ்துதியுடன் செயற்படாமல், தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத அளவு மறைத்துக் கொடுத்தவர். ஏழாமவர் : மக்களை விட்டும் தனித்து இருக்கும் நிலையில், நாவினால் திக்ர் செய்தோ அல்லது உள்ளத்தால் அல்லாஹ்வை நினைவுபடுத்தியோ, அவன் மீதுள்ள அச்சத்தாலும், அவனது மகத்துவத்தை நினைத்தும் அழுதவர்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. கூறப்பட்டுள்ள ஏழு தரப்பினரது சிறப்பு. மேலும் அவர்களைப் பின்பற்ற ஆர்வமூட்டல்.
  2. 'அவனது நிழல்' என்ற வார்த்தை பற்றி இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : இங்கு நாடப்படுவது அர்ஷுடைய நிழல் தான் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக, ஸல்மான் (ரலி) அவர்கள் வாயிலாக, ஸுனன் ஸஈத் இப்னு மன்ஸூரில், ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் வந்துள்ள ஒரு அறிவிப்பில், 'அல்லாஹ் தனது அர்ஷின் நிலைக் கொடுப்பவர்கள்' என்று வந்துள்ளது.
  3. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நீதம் செலுத்துபவர் என்பதற்காகக் கூறப்பட்ட மிகச் சிறந்த விளக்கமாவது, எல்லைமீறலோ, கவனயீனமோ இன்றி, ஒவ்வொன்றையும் அதற்கே உரிய இடத்தில் வைத்து, அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்றுபவரே அவராகும். அவரை நபியவர்கள் முதலில் கூறக்காரணம், அவரினால் ஏற்படும் பயன் பரந்து காணப்படுவதாகும்.
  4. ஒரு தொழுகைக்குப் பின்னர் இன்னுமொரு தொழுகையை எதிர்பார்ப்பதன் சிறப்பு.
  5. இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸ் அல்லாஹ்வுக்காக நேசம் வைக்க ஆர்வமூட்டுகின்றது. மேலும், அதன் மகத்தான சிறப்பும் அதில் உள்ளது.
  6. பதவி மற்றும் அழகு ஆகியவை குறித்துக் கூறப்படக் காரணம், அவ்விரண்டிலும் மக்களுக்குள்ள அதிக விருப்பமும், ஆசையும் மற்றும் அவற்றை அடைவது சிரமமாக இருப்பதுமாகும்.
  7. தர்மங்களில் மிகச் சிறந்தது, இரகசியமானதும், முகஸ்துதியை விட்டும் தூரமானதுமாகும். எனினும், தர்மம் மற்றும் ஸதகா போன்றவை முகஸ்துதியை விட்டும் நீங்கியதாகவும், ஏனையோரை தர்மம் செய்யத் தூண்டுவதும், ஏனையோர் பின்பற்றுவதும், இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களை வெளிக்காட்டுவதும் நோக்கமாகக் கொள்ளப்பட்டதாகவும் இருந்தால், அவற்றைப் பகிரங்கப்படுத்துவது மார்க்கத்தில் உள்ளதாகும்.
  8. இந்த ஏழு பேரும் இந்த இன்பத்தை அடைந்து கொண்டது, அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் செயற்பட்டு, மனோஇச்சைக்கு மாறு செய்ததினாலும் ஆகும்.
  9. 'அல்லாஹ் நிழல் வழங்கும் ஏழு தரப்பினர்' என்று நபியவர்கள் கூறியிருப்பதில், இந்த எண்ணிக்கையில் வரையறுப்பது நோக்கமாகக் கொள்ளப்படவில்லை. மாறாக, இந்த ஹதீஸில் வந்துள்ள தரப்பினர்களைத் தவிர, அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைப் பெறும் வேறு தரப்பினரும் வந்தள்ளனர்.
  10. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த ஹதீஸில் ஆண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை அவ்வாறே புரிந்துகொள்ளமுடியாது. மாறாக, கூறப்பட்டுள்ள எந்த நற்கருமத்திலும், எந்த ஆண்களுடனும் பெண்களும் வருவார்கள். ஆனால், நீதம் செலுத்தும் தலைவர் என்பதன் மூலம், நாட்டுத் தலைவர் நாடப்பட்டாலே தவிர. ஆனால், குடும்பத்தை உடைய ஒரு பெண், அவர்களுக்கு நீதம் செலுத்துபவளாக இருக்கும் போது, அவள் இதனுள் நுழையலாம். பள்ளிவாசலோடு எப்போதும் தொடர்பாக இருத்தல் எனும் விடயம் வெளியேறி விடும். ஏனெனில், ஒரு பெண் பள்ளிவாசலில் தொழுவதை விட, வீட்டில் தொழுவதே சிறந்தது. அதனைத் தவிர ஏனையவற்றில் அவர்களும் உள்ளடங்குவார்கள். ஒரு பெண்ணால் பாவத்திற்கு அழைக்கப்பட்டவர் விடயத்தில் கூட, மறுபுறம், ஒரு பெண்ணை உதாரணமாக, ஒரு அழகான அரசன் தவறான நடத்தைக்கு அழைத்து, அவளுக்குத் தேவையிருந்தும், அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாகத் தவிர்ந்துகொள்ளும் ஒரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு