பிரிவுகள்:

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قُلْت يَا رَسُولَ اللَّهِ! أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ وَيُبَاعِدْنِي مِنْ النَّارِ، قَالَ:
«لَقَدْ سَأَلْتَ عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ: تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ البَيْتَ، ثُمَّ قَالَ: أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الخَيْرِ، الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ المَاءُ النَّارَ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ، ثُمَّ تَلَا: {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ} حَتَّى {بَلَغَ يَعْمَلُونَ}، ثُمَّ قَالَ: أَلَا أُخْبِرُك بِرَأْسِ الأَمْرِ وَعَمُودِهِ وَذِرْوَةِ سَنَامِهِ، فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: رَأْسُ الأَمْرِ الإِسْلَامُ، وَعَمُودُهُ الصَّلَاةُ، وَذِرْوَةُ سَنَامِهِ الجِهَادُ، ثُمَّ قَالَ: أَلَا أُخْبِرُك بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ، فقُلْت: بَلَى يَا رَسُولَ اللَّه! فَأَخَذَ بِلِسَانِهِ وَقَالَ: كُفَّ عَلَيْك هَذَا، قُلْت: يَا نَبِيَّ اللَّهِ! وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ، فَقَالَ: ثَكِلَتْكَ أُمُّكَ وَهَلْ يَكُبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ أَوْ قَالَ عَلَى مَنَاخِرِهِمْ إلَّا حَصَائِدُ أَلسِنَتِهِمْ»!

[صحيح] - [رواه الترمذي] - [الأربعون النووية: 29]
المزيــد ...

முஆது இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியதும், நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடியதுமான ஒரு செயலை சொல்லித் தாருங்கள் என நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள் :
'நீங்கள் மிகவும் பெரிய ஒரு விடயம் குறித்து வினவி இருக்கின்றீர்கள். இருந்தாலும் அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கி வைத்திருக்கின்றானோ அது அவர்களுக்கு மிகவும் இலகுவானதாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணைவைக்காதீர். கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிலைநாட்டுங்கள். 'ஸகாத்'த்தை கொடுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள். நீங்கள் இறைஇல்லத்திற்கு புனித பயணம் மேற்கொள்ளுங்கள். (ஹஜ் செய்யுங்கள்;). என்று கூறிவிட்டு, பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு நன்மையின் வாசல்களை காட்டித் தரட்டுமா? என வினவி விட்டுச் சொன்னார்கள் : நோன்பு ஒரு கேடயம், நீர் நெருப்பை அணைப்பது போல் தர்மம் பாவங்களை அழித்தொழிக்கின்றது. அதுபோலவே இரவின் கடைசிப் பகுதியில் ஒருவரின் தொழுகையும் என்று கூறி விட்டு, பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள் : ''அவர்கள் (இரவில்) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, (எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும், (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்த அவர்கள் செலவு செய்வார்கள்'. அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக, அவர்களுக்காக(ச் சித்தப்படுத்தி) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிரக் கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்து கொள்ள முடியாது' (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ளன.)". அல்குர்ஆன் (32:16-17) பின் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு இந்த விடயத்தில் (மார்க்கத்தின்) தலையாயது பற்றியும் தூண் மற்றும் உச்சம் பற்றியும் சொல்லட்டுமா?' என்றார்கள். 'இறை தூதரவர்களே, ஆம்! சொல்லுங்கள் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த விடயத்தின் தலையாயது இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதன் உச்சி ஜிஹாத் ஆகும் என்றார்கள். பிறகு அவர்கள், இவை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது குறித்து நான் சொல்ல வேண்டாமா? என வினவினார்கள். நான் 'இறைவனின் தூதரவர்களே! ஆமாம் சொல்லுங்கள்'' என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது நாவை கரத்தால் பற்றிக் கொண்டு, ''இதைக் கட்டுப்படுத்துங்கள்'' என்று சொன்னார்கள். இறைவனின் தூதரவர்களே! நாம் பேசுவது குறித்து குற்றம் பிடிக்கப்படுவோமா? என்று நான் கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், ''உம் தாய் உம்மை இழக்கட்டும்!. மனிதர்கள் தங்கள் நாவால் அறுவடை செய்தவைகளைத் தவிர அவர்களை நரக நெருப்பில் முகங்குப்புற தள்ளக் கூடியது வெறெதுவும் உண்டா?'' என்று கேட்டார்கள். - 1.ஜிஹாத் : ஜிஹாத் என்பதற்கு அறப்போர் அல்லது புனிதப்போர் எனப் பொதுவாக பொருள் கொள்ளப்படுகின்றது. அதற்கு இன்னும் விரிவான பொருள்கள் உண்டு. இதில் இஸ்லாத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளும் அடங்கும். ஆகவே தான் 'ஜிஹாத்' என்ற அரபிச் சொல் அப்படியே இங்கு கையாளப்பட்டிருக்கின்றது. 2. ஸகிலத்க உம்முக. ''தவறான பயனற்ற பேச்சைப் பேச வேண்டாம்!'' என்று கூறுவதற்கு அரபி மொழியில் இச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

[சரியானது] - [இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்] - [அல்அர்பஊன் அந்நவவிய்யா - 29]

விளக்கம்

முஆத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள் பயணித்துக்கொண்டிருக்கும் போது நான் நபியவர்களை நெருங்கிவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'மனித ஆத்மாக்களால் செய்யச் சிரமமான ஒரு அமலைப் பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். யாருக்கெல்லாம் அல்லாஹ் அதனை இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அவர்களுக்கு அது இலகுவாக இருக்கும். இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுங்கள் :
முதலாவது : அல்லாஹ்வுக்கு எந்த இணையும் வைக்காது அவனை மாத்திரமே வணங்க வேண்டும்.
இரண்டாவது, தினமும் கடமையாக்கப்பட்டுள்ள ஸுபஹ், ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும், நிபந்தனைகள், அடிப்படைகள் மற்றும் கடமைகளைப் பேணித் தொழவேண்டும்.
மூன்றாவது, கடமையான ஸகாத்தைக் கொடுக்க வேண்டும். ஸகாத் என்பது, ஒரு சொத்து, குறிப்பிட்ட ஒரு அளவை அடையும் போது கடமையாகும் பணம் சார்ந்த ஒரு வணக்கமாகும். தகுதியானவர்களுக்கு அது ஒப்படைக்கப்பட வேண்டும்.
நான்காவது, நோன்பு நோற்கவேண்டும். அதாவது, வணக்கம் என்ற நோக்கத்துடன், அதிகாலை உதயமாகியதில் இருந்து, சூரியன் மறையும் வரை உணவு, பானம் போன்ற நோன்பை முறிக்கும் அனைத்தையும் தவிர்த்தல்.
ஐந்தாவது : ஹஜ் செய்தல். அதாவது, மக்காவை நாடிச் சென்று, அல்லாஹ்வை வழிபடும் நோக்கில் ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றல்.
பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நன்மையின் வாயில்களை அடையச் செய்யும் காரணிகள் பற்றி உமக்கு அறிவித்துத் தரட்டுமா? அதாவது, அந்தக் கடமைகளுடன், உபரியானவற்றையும் நீ செய்யவேண்டும் :
முதலாவது: உபரியான நோன்புகள். இவை இச்சைகளை உடைத்து, பலத்தைக் குறைத்து பாவத்தில் வீழ்வதைத் தடுக்கின்றன.
இரண்டாவது : உபரியான தர்மங்கள். இவை செய்யப்பட்ட பாவங்களை அணைத்து, அழித்து, அதன் தடயங்களையும் நீக்கிவிடும்.
மூன்றாவது : இரவுடைய இறுதி மூன்றில் ஒரு பகுதியில் தஹஜ்ஜுத் தொழுதல். பின்பு நபியவர்கள் "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் (தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆக் கேட்டல் போன்றவற்றின் மூலம்) பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமை நாளில் அவர்களது கண்களைக் குளிரச் செய்பவை மற்றும் சுவனத்தில் உள்ள இன்பங்களை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
பின்பு நபியவர்கள், 'மார்க்கத்தின் அடிப்படையையும், அது தாங்கியிருக்கும் தூணையும், அதன் உச்சநிலையையும் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள்.
அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'ஆம்! யா ரஸூலல்லாஹ்' என்று கூறினார்கள்.
அப்போது நபியவர்கள் கூறினார்கள் : அடிப்படையான அம்சம் இஸ்லாமாகும். அதாவது, ஷஹாதத் கலிமாவாகும். அதன் மூலம் தான் மார்க்கத்தின் அடிப்படையை அவன் அடைந்து கொள்கின்றான். அதன் தூண் தொழுகையாகும். தூண்கள் இல்லாமல் வீடில்லை என்பது போன்று, தொழுகையில்லாமல் இஸ்லாம் இல்லை. யார் தொழுகின்றாரோ, அவரது மார்க்கம் பலமடைந்து, உயர்வடைந்துவிடும். அதன் உயர்நிலை, அதாவது, அது உயர்வடைவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உயரச் செய்வதற்காக சிரமப்பட்டு, மார்க்கத்தின் எதிரிகளோடு போரிட்டு ஜிஹாத் செய்யும் போதே!
பின்பு நபியவர்கள், 'முன்சென்ற அனைத்தையும் முறையாகப் பேணிப் பாதுகாக்கும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டுவிட்டு, தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள். அவசியமில்லாத எதனையும் பேசிவிடாதே' என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நாம் பேசுகின்ற அனைத்துக்கும் அல்லாஹ் எம்மை விசாரித்துத் தண்டிப்பானா?' என்று கேட்கின்றார்கள்.
அதற்கு நபியவர்கள், 'உன் தாய் உன்னை இழக்கட்டும்' (இங்கு அவர்களுக்கெதிராக துஆச் செய்வது நோக்கமல்ல. அறிந்து, விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு விடயம் பற்றி விழிப்பூட்டும் போது அரபிகள் பாவிக்கும் ஒரு வார்ததையாகும்.) என்று கூறிவிட்டு, 'அவர்களின் நாவுகளின் அறுவடைகளாகிய, நிராகரிப்பு, ஏசுதல், புறம், கோள், இட்டுக்கட்டல் போன்றவற்றைத் தவிர, வேறு எவைதான் அவர்களை நரகில் முகங்குப்புற எறிகின்றன?' என்று கேட்டார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அறிவைக் கற்பதில் நபித்தோழர்களுக்கு இருந்த ஆர்வம். அதனால்தான், நபியவர்களிடம் இவ்வாறான கேள்விகளை அதிகம் கேட்பார்கள்.
  2. அமல்கள் சுவனம் நுழையக் காரணமாக அமைகின்றன என்பதை நபித்தோழர்கள் அறிந்திருப்பது அவர்களுடைய மார்க்க விளக்கத்தைக் காட்டுகின்றது.
  3. முஆத் (ரலி) அவர்களிடமிருந்து வெளிப்பட்ட கேள்வி மிக முக்கியமான கேள்வியாகும். ஏனெனில், அது தான் யதார்த்தத்தில், இந்த வாழ்க்கையினதும், உள்ளமையினதும் இரகசியமாகும். இந்த உலகில் இருக்கும் மனிதர்களோ, ஜின்களோ அனைவருமே, ஒன்றில் சுவனம் நுழைவதை அல்லது நரகில் நுழைவதை நோக்கிச் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் இந்தக் கேள்வி மிக முக்கியமாகின்றது.
  4. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளாகிய, ஷஹாதா, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகியவற்றை செய்வதினாலேயே சுவனம் நுழையமுடியும்.
  5. மார்க்கத்தின் அடிப்படை, முக்கியமானவற்றில் மிகப் பெறுமதியானது, கடமைகளில் மிக உயர்ந்தது, அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காமல் அவனை மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்குவதாகும்.
  6. அல்லாஹ் தனது அடியார்கள் மீது செய்துள்ள அருளின் காரணமாக, அவர்கள் நற்கூலி மற்றும் பாவமன்னிப்பின் வழிகளை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நன்மையின் வாயில்களை அவர்களுக்குத் திறந்துகொடுத்துள்ளமை.
  7. கடமைகளை நிறைவேற்றிய பின்னர், உபரியான வணக்கங்கள் ஊடாக அல்லாஹ்வை நெருங்குவதன் சிறப்பு.
  8. இஸ்லாத்தில் தொழுகை என்பது, ஒரு கூடாரத்தைத் தாங்கியிருக்கும் தூணைப் போன்றது. அது விழுந்தால், கூடாரமே விழுந்துவிடுவது போன்று, தொழுகையில்லாவிட்டால் இஸ்லாமே இல்லை.
  9. ஒரு மனிதன் தனது மார்க்கத்தைப் பாதிக்கும் எதையும் பேசாமல் நாவைப் பாதுகாப்பது அவசியமாகும்.
  10. நாவைத் தடுத்துக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது தான் அனைத்து நன்மைகளுக்குமான அடிப்படையாகும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (54)
பிரிவுகள்
மேலதிக விபரங்களுக்கு